27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய சித்தர்கள் இவர்கள்தான்..!!

27 நட்சத்திரத்திற்கும் உரிய சித்தர்களை பற்றி பார்ப்போம். எல்லா சித்தர்களின் ஜீவ சமாதியும் சிவாலயமாகவே இருக்கும். குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும்,  வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்.
1. அசுவினி: அசுவினி நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் பெயர் காளங்கிநாதர். இவருடைய சமாதி மற்றும் சக்தி அலைகள்  கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது.
 
2. பரணி: சித்தர் போகர் ஆவார். இவருடைய சமாதி பழனி முருகன் சன்னதியில் உள்ளது.
 
3. கிருத்திகை: ரோமரிஷி சித்தர் ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரடியாக கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என்பதால், இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி நினைத்து வணங்க வேண்டும்.
 
4. ரோகிணி: சித்தர் மச்சமுனி ஆவார். இவருடைய ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
 
5. மிருகசீரிஷம்: சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர்  திருவரங்கம் ஆகும்.
 
6. திருவாதிரை: சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலையில் உள்ளது.
 
7. புனர்பூசம்: சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
8. பூசம்: கமல முனி சித்தர் ஆவார். இவருடைய ஜீவ சமாதி திருவாரூர் என்ற ஊரில் உள்ளது.
 
9. ஆயில்யம்: இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் அகத்தியர். இவருடைய ஒளி வட்டம் குற்றால பொதிகை மலையில் உள்ளது. சமாதி  திருவனந்தபுரத்தில் உள்ளது.
 
10. மகம்: இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.
 
11. பூரம்: இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவியின் அம்சமாக உள்ளார். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவரை வழிபட வேண்டுமானால் அழகர் மலைக்கு செல்வது சிறப்பு.
 
12. உத்திரம்: இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ளது.
 
13. அஸ்தம்: சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய  கோயில் ஆகும்.
 
14. சித்திரை நட்சத்திரம்: சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.
 
15. சுவாதி: சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
 
16. விசாகம் நட்சத்திரம்: சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும், குதம்பை சித்தரின் ஜீவ சமாதி  மாயவரத்திலும் உள்ளது.
 
17. அனுஷம்: சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுவார். இவரின் ஜீவ சமாதி எட்டுக்குடியில் உள்ளது.
 
18. கேட்டை: சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே  போதும். அவ்விடம் வருவார்.
 
19. மூலம் நட்சத்திரம்: சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.
 
20. பூராடம்: சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ  ஒளி உள்ளது.
 
21. உத்திராடம்: சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதியில் உள்ளது.
 
22. திருவோணம்: இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவருடைய சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள  பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.
 
23. அவிட்டம்: சித்தர் திருமூலர் ஆவார். இவருடைய ஜீவசமாதி சிதம்பரத்தில் உள்ளது.
 
24. சதயம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர். இவரின் சமாதி எங்கு என தெரியவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.
 
25. பூராட்டாதி: இதற்கான சித்தர் சோதி முனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால்  அங்கு அருள் பாலிப்பார்.
 
26. உத்திரட்டாதி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்து விட்டதாக வரலாறு கூறுகிறது. இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.
 
27. ரேவதி: சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது. தனி அறையில் ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒரு நிலைப்பாட்டோடு சித்தரை வணங்கி வந்தால் போதும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்