சந்திர கிரகணத்தை முன்னிட்டு மூடப்படவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில்

வியாழன், 26 ஜூலை 2018 (14:12 IST)
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை 12 மணி நேரம் மூடப்படஉள்ளது.
நாளை இரவு 11.54 மணி முதல் சனிக்கிழமை காலை 3.49 மணி வரை முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. கிரகண காலங்களில் 6 மணி நேரத்துக்கு முன்னதாக ஏழுமலையான் கோவில் மூடப்படுவது வழக்கம். அதன்படி, நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 4.15 மணி வரை  ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது. 
 
சந்திர கிரகணம் முடிந்த பின் கோவில் திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்டவை செய்து, காலை 7 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு  அனுமதிக்கப்படுவர். இதையொட்டி நாளை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட  ஆர்ஜித சேவைகளையும், பவுர்ணமி அன்று இரவு நடைபெறும் கருட சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
 
மேலும் நாளை மறுநாள் காலை நடைபெறும் சுப்ரவாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும். மேலும் திருமலையில் செயல்பட்டு வரும் அன்னதான கூடங்கள் நாளை மாலை 5 மணி முதல் சனிக்கிழமை காலை 9 மணி வரை மூடப்பட உள்ளது.
 
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மாலை 3 மணி முதல் 5 மணி வரை பக்தர்களுக்கு புளியோதரை, தக்காளி சாத பொட்டலங்களை வழங்க  தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் 12 மணி நேரம்  மூடப்பட உள்ளது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதியில் செயல்பட்டு வரும் அன்னதான கவுன்ட்டர்களும் மூடப்படும் என அதிகாரிகள்  தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்