மருத்துவ குழுவினர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை: ஊரடங்கு நீட்டிப்பா?

வியாழன், 30 ஏப்ரல் 2020 (15:49 IST)
தமிழகம் உள்பட நாடு முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 19 மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை செய்துள்ளார்.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழக அரசின் சீரிய நடவடிக்கையால் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஓரளவுக்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், வருகிற மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்புப் பணிக்காக உருவாக்கப்பட்ட 19 மருத்துவ நிபுணர் குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். 
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மே 3ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்