எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கில் எம்.ஆர். ராதாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட தினம் இன்று

ஞாயிறு, 4 நவம்பர் 2018 (11:59 IST)
1967 ம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் சமயம். அண்ணா தலைமையிலான திமுக தமிழகம் முழுவதும் பரபரப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. 


அந்தத் தேர்தலில் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர், பரங்கிமலை தொகுதியில் நிறுத்தப்பட்டிருந்தார். 
 
தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருந்தநிலையில் ஜனவரி 12 ந்தேதி காலை தன் தொகுதியில் வாக்கு சேகரித்தார் எம்.ஜி.ஆர். பிற்பகலில் அவரது ஓய்வு நேரம் என்பதால் தன் ராமாவரம் இல்லத்திற்கு திரும்பினார். மேலும்  அன்றையதினம் 'பெற்றால்தான் பிள்ளையா'  படத்தில் ஃபைனான்ஸ் பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் வாசுவும் நடிகர் எம்.ஆர். ராதாவும்  எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு வந்தனர். எம்.ஜி.ஆர் அவர்களை வரவேற்று ஹாலில் அமரவைத்தார்.    இந்த சந்திப்பின் போது  எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். ராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர்.
 
இதுதொடர்பாக எம்.ஆர் ராதா மீது கொலை முயற்சி வழக்கு பதிவானது.  சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்றது.  வாதங்களின் இறுதியில் அவர், ராதா குற்றவாளி என தீர்ப்பளித்தார். அதன்பின்னர், செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது.
 
அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், ராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினார்கள். எம்.ஜி.ஆர் தன்னைத் துப்பாக்கியால் சுட்டதால் தற்காப்புக்காக தான் திருப்பிச்சுட்டதாக (defence ) எம்.ஆர். ராதா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
 
ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர் இதே நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், ராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் ராதா குற்றவாளியென முடிவு செய்தார்.
 
இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார். ராதாவின் வயது (57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்