டெல்லி காற்று மாசுபாடு; அரவிந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்த நடவடிக்கை!

ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (15:58 IST)
டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாசுபாட்டை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார்.

டெல்லியில் கடந்த சில ஆண்டுகளில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. வாகனப்புகை, குப்பைகளை எரித்தல் போன்ற பல்வேறு காரணிகளால் டெல்லியில் மக்கள் சுவாசிக்க முடியாத அளவு காற்றின் தரம் மோசமாக ஆனது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் கொரோனா மற்றும் காற்று மாசுபாடு ஆகிய இரண்டு பிரச்சினைகளை டெல்லி மக்கள் ஒரே சமயத்தில் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு உள்ளானார்கள். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் கெஜ்ரிவால் அரசு காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் “யுத் ப்ரதுஷன் கெ விருத்” என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்கீழ் செயல்பட்ட தன்னார்வலர்களை கொண்டு சுற்றுசூழலை காக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் வன மகோத்சவம் என்ற திட்டத்தின் கீழ் டெல்லி முழுவதும் 3 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் தன்னார்வலர்கள் மூலம் நடப்பட்டுள்ளன. இதனால் டெல்லியில் காற்று மாசுபாட்டை சுற்றுசூழல் மூலம் சீரமைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. டெல்லியில் மேலும் 4 காடுகளை உருவாக்கும் முயற்சியில் டெல்லி அரசு ஈடுபட்டுள்ளது.

அதுபோல சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால் வாகனத்தை அணை என்ற விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு டெல்லி மக்களிடையே நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது. 2500 தன்னார்வலர்கள் 100க்கும் அதிகமான டிராபிக் சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது இஞ்சினை ஆப் செய்து வைக்க கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் டெல்லியில் சுற்றுசூழல் மாசுபாடு சம்பவங்கள் குறித்த புகார்களை புகைப்படங்களாக, வீடியோவாக, செய்தியாக அனுப்பு க்ரீன் டெல்லி என்னும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வரும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதன்மூலம் நகரத்தில் அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய 13 பகுதிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் டெல்லியில் புசா அக்ரிகல்சர் இண்ஸ்டிடியூட்டுடன் இணைந்து டெல்லி அரசு விவசாய நிலங்களில் பதர்களை எரிப்பதை விடுத்து அவற்றை உரமாக மாற்றுவது குறித்த முயற்சியையும் மேற்கொள்ள உள்ளது. இதற்கான திட்டங்கள் இந்த ஆண்டில் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்