பூமியை அழிக்கும் சூப்பர்ஹீரோ: ப்ரைட்பர்ன்

செவ்வாய், 28 மே 2019 (14:02 IST)
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் படமென்றால் அது சூப்பர்ஹீரோ படங்கள்தான். சம்மர் லீவுகளில் குழந்தைகளை தியேட்டர்களுக்கு அழைத்து செல்ல சூப்பர் ஹீரோ படங்கள் நல்ல சாய்ஸ். சூப்பர்ஹீரோக்கள் என்றாலே ரொம்ப நல்லவர்கள், பூமியை பாதுகாப்பவர்கள் என்பதுதான் அடிப்படை. அந்த அடிப்படையை மீறி பூமியை அழிக்க வரும் வில்லன்களை கூட சிலசமயம் நாம் ரசிப்பது உண்டு. இன்றும்கூட நிறைய பேருக்கு ஜோக்கர், தானோஸ் போன்ற வில்லன்களை பிடிக்கும்.

சூப்பர்ஹீரோ என்றாலே நிறைய பேருக்கு நினைவுக்கு வருவது சூப்பர்மேன்தான். அப்படிப்பட்ட சூப்பர்மேனின் கதையே கொஞ்சம் உல்ட்டா ஆகி அவன் சூப்பர்வில்லனாக மாறியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதுதான் ப்ரைட்பர்ன் கதையின் அடிப்படை. சூப்பர்மேன் கதைபோலதான் இதிலும் எல்லாமே தொடங்குகிறது. கான்சாசில் உள்ள ப்ரைட்பர்ன் நகரில் வசிக்கும் டோரி, கைல் ப்ரையர் தம்பதிக்கு குழந்தை கிடையாது. அப்போது வானிலிருந்து எறிக்கல் போன்ற ஒன்று வந்து அவர்களின் வீட்டின் அருகே விழுகிறது. அதில் ஒரு குழந்தை இருக்கிறது. அதை அவர்கள் வளர்க்க முடிவெடுக்கிறார்கள். அதற்கு ப்ராண்டன் என பெயர் வைக்கிறார்கள்.

ப்ராண்டன் 12 வயது பையனாக வளர்கிறான். அவனுக்கு சில அதிசய சக்திகள் இருப்பதை உணர தொடங்குகிறான். அதேசமயம் அவனுக்கு சில பேச்சு குரல்கள் கேட்கிறது. அந்த மொழி அவனுக்கு புரிவதில்லை. அவனது வித்தியாசமான பழக்கவழக்கங்களால் அவனிடம் அவனது பள்ளி நண்பர்கள் கூட பழக தயங்குகின்றனர். அவனது அம்மா மட்டுமே அவனை தொடர்ந்து அன்பு செலுத்தி வருகிறாள். ஒரு நாள் அவனுக்கு கேட்கும் சத்தத்தின் அர்த்தம் அவனுக்கு புரிய தொடங்குகிறது. அது பூமியை அழிக்க சொல்வதை அவன் புரிந்து கொள்கிறான். தான் இதற்காகதான் அனுப்பப்பட்டோம் என நினைக்கிறான். அவனுக்கு தொல்லை கொடுத்தவர்களை கொடூரமாக கொலை செய்ய ஆரம்பிக்கிறான். அவன் மேல் யாருக்கும் சந்தேகம் வராதபடி நடந்து கொள்கிறான்.

இவன் ஆபத்தானவன் என்பதை தெரிந்து கொண்ட அவன் அப்பா கைல் இதை டோரியிடம் சொல்கிறான். டோரி அதை நம்ப மறுக்கிறாள். அதனால் கைல் தனது வளர்ப்பு பையனை தானே கொன்றுவிட முடிவெடுத்து அவனை காட்டுக்குள் அழைத்து சென்று சுட்டுவிடுகிறான். ஆனால் தோட்டாக்கள் அவனை ஒன்றும் செய்யவில்லை. தன் அப்பாவையே ப்ராண்டன் கொன்று விடுகிறான். கடைசியாக டோரிக்கு எல்லா உண்மையும் தெரிய வரும்போது ப்ராண்டன் கொடூரமான அரக்கனாக மாறியிருக்கிறான். ப்ராண்டனை கொல்ல ஒரே ஒரு வழி மட்டும்தான் இருக்கிறது. அது டோரிக்கு மட்டும்தான் தெரியும். அவள் ப்ராண்டனை கொன்றாளா அல்லது தாய் பாசத்தில் அவனை உலகத்தை அழிக்க விட்டுவிட்டாளா என்பது கதையின் முடிவு.

முழுக்க முழுக்க சூப்பர்மேன் கதையை போல தெரிந்தாலும் குழந்தைகள் பார்க்க முடியாதவாறு கொடூரமான கொலைகாட்சிகள் நிறைய உள்ளன. அதனால் படத்திற்கு 18+ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். படத்தை தியேட்டரில் பார்த்தால் ஒரு பேய் படத்தை பார்ப்பதை விட திகிலான உணர்வை நிச்சயம் கொடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்