எம்.ஜி.ஆர். ஏன் மக்களின் நாயகனாக இன்றும் கொண்டாடப்படுகிறார்?

செவ்வாய், 17 ஜனவரி 2017 (15:25 IST)
இந்த கேள்வி என்னுடைய இளம் வயதில் விடைதெரியாத புதிராக எனக்குள் நீண்டகாலம் இருந்தது. அப்போது நாகர்கோவில் பயோனியர் முத்து திரையரங்கில் ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். அங்கு அர்னால்டு ஸ்வாஸ்நேகரை பார்ப்பதற்காக சென்ற போது, எம்.ஜி.ஆர். தியேட்டர் கதவை திறந்துவிட்டார்.


 

அது கறுப்பு எம்.ஜி.ஆர். அவரைப்போலவே தலைமுடி, அவர் பாடல் காட்சியில் அணிவது போன்ற ஜகினா சட்டை, இறுக்கமான பேன்ட், கழுத்தில் ஸ்டைலாக அழுக்குக் கர்ச்சீப், கழுவி நாளான ஷு, கைவிரல்களில் எம்.ஜி.ஆர். படம் பொறித்த மோதிரம், அதேபோல் கைக்கடிகாரம் என்று எங்கும் எம்.ஜி.ஆர் மயம்.

எனக்கு அவரைப் பார்க்க பகீரென்றது. இப்படியொரு தோற்றத்தில் இவரால் எப்படி மக்கள் மத்தியில் நடமாட முடிகிறது? முக்கியமாக இவரது வீட்டில் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

எம்.ஜி.ஆரின் புகழின் ஆதிக்கத்துக்கு உள்படாத கேரளா எல்லைப்பகுதியிலிருந்து வந்தவன் என்பதால், எம்.ஜி.ஆர். மீதான அவரது ரசிகர்களின் அதீத ஈடுபாடு விசித்திரமாகவே இருந்தது.


 

சென்னை வந்த பிறகு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், எஸ்.வி.ஒயின்ஸ் அளவுக்கு ஸ்டார் திரையரங்கும் நண்பர்களின் பேச்சில் பிரபலமாக இருப்பதை அறிந்தேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் திரையிடும் நாள்களில் ஸ்டார் தியேட்டர் ஒரு கொண்டாட்டவெளியாக மாறும் என்றார் நண்பர் மலரோன். ஒருநாள் நிறைபோதையும், பிரியாணியுமாக தியேட்டருக்கு நானும் நண்பரும் சொன்றேnம். மீன்பாடி வண்டிகளாலும், ஆட்டோ ரிக்ஷாக்களாலும் தியேட்டரின் முன்பக்கம் நிரம்பியிருந்தது.

அது எம்.ஜி.ஆர். நடித்த படம். எம்.ஜி.ஆர். திரையில் தோன்றியதை சரியாக கணித்து ஒருவன் பூசணிக்காய் உடைத்தான். படம் தொடங்கியபோது ஏற்றப்பட்ட சூடம் படம் முடியும்வரை கொளுத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. பாடல்கள் வரும் நேரத்தை தியேட்டரில் அனேகமாக அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். பாடல் தொடங்கும் முன்பே தியேட்டரின் பல பாகங்களிலிருந்தும் டி.எம்.சௌந்தர்ராஜன்கள் பாட ஆரம்பித்தனர். இருப்பது தியேட்டரிலா லைவ் கான்சர்டின் நடுவிலா என்ற குழப்பம் எங்களுக்கு. அன்று போல் ஒரு கொண்டாட்டவெளியை நான் முன்போ பின்போ அனுபவப்பட்டதில்லை. அந்த கொண்டாட்டத்தின் வழியாக சாதாரண ஜனங்கள் தங்களின் அன்றாட கவலைகளை, கனவுகளை, ஏமாற்றங்களை கடந்து சென்றனர். அப்படி கடந்து சொல்வதற்கு ஏதுவாக எம்.ஜி.ஆர். தன்னையும், தனது படங்களையும் தகவமைத்துக் கொண்டார் என்பதே உண்மை. எம்.ஜி.ஆர் மீது அதுவரையிருந்த எனது ஒவ்வாமை அன்றுடன் சற்று மட்டுப்பட்டது எனலாம்.

சென்னையில் ஸ்டார் திரையரங்கைப் போல பல திரையரங்குகள் இருந்தன. அதில் மேகலாவும் ஒன்று. எம்.ஜி.ஆர். படங்கள்தான் இங்கு திரையிடப்படும். எந்தப் படம் வெளியானாலும் கூட்டம் கும்மியடிக்கும். இன்று மேகலா இல்லை ஸ்டார் இல்லை அதனால் கொண்டாட்டங்களும் இல்லை.

எம்.ஜி.ஆரின் படங்கள் குறித்தும், அதில் வெளிப்படும் நாயக பிம்பம் குறித்தும், அவரது அரசியல் குறித்தும் ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால், அடித்தட்டு மக்களை அவரைப்போல் கேளிக்கைப்படுத்தியவர்கள் இல்லை.

மதத்தை குறித்து பேசிய மார்க்ஸ், மதம் ஒரு அபின். ஆனால் அதற்கு மாற்றாக வைக்க எதுவும் இல்லை என்றார். அதுபோல் எம்.ஜி.ஆர். அடித்தட்டு மக்களின் ஆதர்சம். அவர்களின் அதீத தனிமனித வழிபாடு மோசமான முன்னுதாரமாக இருந்தாலும், எம்.ஜி.ஆர். என்ற ஆதர்சத்துக்கு மாற்றாக வைக்க இங்கு இதுவரை எவரும் இல்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்