நான் ஒரு கால்டாக்ஸி – தேர்தலில் ஒதுங்கியது குறித்து கமல் விளக்கம் !

திங்கள், 25 மார்ச் 2019 (12:07 IST)
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தேர்தலில் போட்டியிடாதது குறித்து தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது என முடிவு எடுத்துள்ளார். இதற்காக தங்கள் கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். ஆனால் கோவை, தென் சென்னை அல்லது ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தில் தான் கமல் பின்வாங்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு சென்னை விமானநிலையத்தில் பதில் அளித்த கமல் ‘வேட்பாளராக நிற்பதற்கு எனக்கு எந்த தயக்கமுமில்லை. ஆனால் அதைவிட முக்கியமான வேலைகள் உள்ளன. பல்லக்கில் நான் பவனி வர விரும்பவில்லை. பல்லக்குக்கு தோள் கொடுக்கவே விரும்புகின்றேன். இன்று போட்டியிடும் முகங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை நாளை தெரிந்த முகமாக்குவதே எனது வேலை. என்னை ஒரு உபேர் டாக்ஸி போன்று கருதுகிறேன். அதில்  இந்த வேட்பாளர்கள் அனைவரும் பயணிக்கட்டும். நான் தேர்தலில் நின்றால் ஒரு தொகுதியிலேயே எனது கவனம் குவிந்துவிடும். இப்போது அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்கலாம்.’ எனக் கூறியுள்ளார்.

பின்னர் பத்திரிக்கையாளர்கள் உங்களுடைய தேர்தல் அறிக்கை சாத்தியமா என்று எழுப்பியக் கேள்விக்கு ‘ சாத்தியமாவதை மட்டுமே நாங்கள் அறிவித்துள்ளோம்’ எனக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்