சிவபெருமான் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தரும் தலம் எது தெரியுமா...?

வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். 


வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவபெருமானை வேண்டினர்.
 
சிவபெருமான் அக்கொடிய ஆலகால விஷத்தினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த அன்னை பார்வதி, சிவபெருமானைத் தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு, கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் (கண்டத்தில்) நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் “நீலகண்டன்” ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் “அமுதாம்பிகை” ஆனாள்.
 
பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் முன்பு விஷமுண்ட மயக்கத்தில் இத்தலத்தில் அன்னை பார்வதியின் மடியில் தலைவைத்து சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் கூறுகிறது. இத்தலத்தில் சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், "பள்ளி கொண்டீஸ்வரர்' எனப்படுகிறார். 
 
பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோயில் விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால்  கட்டப்பட்டது. 
 
சிவபெருமான் பள்ளி கொண்ட நிலையும், அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். மூலவர் "வால்மீகிஸ்வரர்"  என்றழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் இராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர்.
 
அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகர்களுக்குப் பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளனர்.
 
பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.
 
விஷமுண்ட மயக்கத்தில் சிவபெருமான், அம்மை பார்வதியின் மடியில் தலையை வைத்து படுத்திருக்கும் அரிய காட்சியை ஆந்திர மாநிலம் சுருட்டபள்ளியில்  காணலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்