அழிவின் விளிம்பில் அரிய வகை டால்ஃபின்

புதன், 27 மே 2015 (11:32 IST)
உலகில் மிகவும் அரிதானதும், மிகச் சிறியதுமான மாய் வகை டால்ஃபின்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த 15 வருடங்களுள் அவை முற்றாக அழிந்து போய்விடும் என, புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


 
தற்போது 'மாய்' எனப்படும் இந்த வகை டால்ஃபின்கள், உலகளவில் ஐம்பதுக்கும் குறைவாகவே உள்ளன என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி வலைகளில் சிக்கி ஏராளமான அவ்வகை டால்ஃபின்கள் உயிரிழக்கின்றன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
 
அருகி வரும் இந்த மாய் டால்ஃபின்கள், நியூசிலாந்தின் கடலுக்கு அப்பாலுள்ள ஆழமில்லாத கடற்பரப்பில் மட்டுமே காணப்படுகின்றன.
 
1970கள் முதல் இந்த வகை டால்ஃபின்களின் எண்ணிக்கை அருகி வருகின்றன. தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் இவற்றுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன என்று ஆய்வை நடத்திய சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
 
மீன்பிடி வலைகளில் சிக்கி, இவை இறப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் விரிவாக்கப்பட வேண்டும் என ஜெர்மனியைத் தளமாக கொண்டு, டால்ஃபின்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் 'நாபு' என்ற நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
 
குறிப்பிட்ட இடங்களில் மட்டுமல்லாமல், டால்ஃபின்கள் வாழும் கடற்பிரதேசங்களில் இழுவை வலைகள் முற்றாகத் தடை செய்யபட வேண்டும் எனவும் நாபு நிறுவனம் அறைகூவல் விடுத்துள்ளது.
 
இழுவை வலைகள் மற்றும் மிகச் சிறியக் கண்களைக் கொண்ட சுறுக்குமடி வலைகள் போன்றவற்றில் சிக்கி ஆண்டொன்றுக்கு குறைந்தது ஐந்து மாய் வகை டால்ஃபின்களாவது இறக்க நேரிடுகிறது என புதிய ஆய்வு கூறுகிறது.
 
இந்த அரிய வகை கடற்வாழ் உயிரினத்தில் முழுமையாக வளர்ந்த நிலையிலுள்ள 10 பெண் மாய் டால்ஃபின்கள் உட்பட இப்போது 43 முதல் 47 வரையிலான டால்ஃபின்கள் மட்டுமே உள்ளன என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்