டை ஆனது மகிழ்ச்சியே –விராட் கோலி கருத்து

வியாழன், 25 அக்டோபர் 2018 (09:29 IST)
விசாகப்பட்டினத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டி டையில் முடிந்தது

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் நேற்று விசாகப்பட்டிணத்தில் 2 வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கோலி மற்றும் அம்பாத்தி ராயுடுவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது.

கேப்டன் கோலி இந்த போட்டியில் 81 ரன்களைக் கடந்த போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10000 கடந்த 13 வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் குறைந்த இன்னிங்ஸ்களில் 10000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் சச்சினிடம் இருந்து கைப்பற்றினார். மேலும் அதிரடியாக விளையாடிய தனது 37 வது சதத்தைப் பூர்த்தி அவர் 129 பந்துகளில் 157 ரன்கள் குவித்தார்.

322 ரன்கள் கடினமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் சற்று தடுமாறினாலும் ஹெட்மைர் மற்றும் ஷேய் ஹோப்பின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றியை நோக்கி முன்னேறியது. அதிரடியாக விளையாடிய ஹெட்மைர்  64 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து சஹால் பந்தில் அவுட ஆனார். நிதானமாக கடைசி வரை விளையாடிய ஹோப் 134 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசி ஓவர்களில் சஹால் , குல்தீப் மற்றும் ஷமி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி ரன்களைக் கட்டுப்படுத்தினர். ஆட்டத்தின் 50 வது ஓவரில் வெற்றிக்கு 14 தேவை என்றிருந்த போது உமேஷ் யாதவ் வீசிய அந்த ஓவரில் 1,4,2,விக்கெட்,2,4 ரன்கள் சேர்க்கப்பட்டதால் வெஸ்ட் இண்டிஸின் ஸ்கோர் 321 ஆனது. அதனால் போட்டி இருதரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது. யாதவ்வின் கடைசி ஓவரில் 2 வது பந்து ஹோப்பின் கால்களில் பட்டு அதிர்ஷ்டவசமாக பவுண்டரிக்கு சென்றதும், கடைசி பந்தில் அடிக்கப்பட்ட ஷாட் அம்பாத்தி ராயுடுவின் கைகளில் பட்டு நழுவி பவுண்டரிக்கு சென்றதும் இந்தியாவை வெற்றியிலிருந்து தடுத்து விட்டது.

சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டை குறித்து பேசிய அவர் ‘தனிப்பட்ட முறையில் எனது சதம் குறித்தும் 10000 ரன் மைல்கல் குறித்தும் நான் மிகுந்த பெருமையடைகிறேன். நாங்கள் முதலில் பேட் செய்த போது 275-280 ரன்களையே இலக்காகக் கொண்டு விளையாடினோம். ஆனால் கடைசி ஓவர்களில் நான் அதிரடியாக விளையாடியது போட்டி டையில் முடிய உதவியது. டையில் முடிந்தது மகிழ்ச்சியே. வெஸ்ட் இன்டீஸ் விளையாடிய விதம் பிரம்மிப்பாக இருக்கிறது. அவர்கள் இந்த டைக்கு தகுதியானவர்களே. ஷேய் ஹோப்பின் இன்னிங்ஸ்களை நான் கவனித்துக் கொண்டு வருகிறேன். அவர் கிஸாசிக்கான இன்னிங்ஸ்களை விளையாடி வருகிறார். அம்பாத்தி ராயுடு சிறப்பாக விளையாடி வருகிறார். அணியில் நான்காவது வீரருக்கான இடம் அவருக்கு நிரந்தரமாகி வருகிறது.’ என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்