துப்பாக்கிச்சூடு - உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் அணி

வெள்ளி, 15 மார்ச் 2019 (10:14 IST)
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் என்னும் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் மசூதியின் உள்ளே சிலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
 
கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக அந்நகர காவல்துறை ஆணையர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.
 
துப்பாக்கித்தாரியிடமிருந்து தப்பிப்பதற்காக தாங்கள் அவ்விடத்தை விட்டு ஓடி வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
 
"முதலில் நாங்கள் மின்சார ஷாக் என்று நினைத்தோம். பிறகு சூழ்நிலையை புரிந்து கொண்டு அனைவரும் அங்கிருந்து ஓடத்தொடங்கினோம்" என்று சம்பவ இடத்திலிருந்து தப்பித்த மோஹான் இப்ராஹிம் என்பவர் நியூசிலாந்து ஹெரால்டிடம் தெரிவித்துள்ளார்.
 
"என்னுடைய நண்பர்கள் இன்னமும் அங்குதான் உள்ளனர். கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால் என் நண்பர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று பயமாக உள்ளது."
கிரைஸ்ட்சர்ச் நகரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பித்தவர்கள், நிகழ்விடத்தில் இறந்த உடல்களை பார்த்ததாக கூறினாலும், அது இன்னும் காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்படவில்லை.
 
துப்பாக்கிச்சூடு நடைபெற்று வரும் பகுதிக்கு அருகேயுள்ள கதீட்ரல் சதுக்கம் என்ற இடத்தில் பருவநிலை மாற்றம் குறித்த பேரணியை நடத்தி வந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
"கிரைஸ்ட்சர்ச்சில் நிலவி வரும் சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு காவல்துறையினர் முழு வீச்சில் செயல்பட்டாலும், நிலைமை இன்னும் அபாயகரமானதாகவே உள்ளது" என்று அந்நகர காவல்துறை ஆணையர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.
 
"மறு அறிவிப்பு வரும்வரை கிரைஸ்ட்சர்ச் நகரவாசிகள் தங்களது வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
கிரைஸ்ட்சர்ச்சின் ஹாகிலே பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு மசூதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலிருந்து, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேறிவிட்டாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அனைவரும் துப்பாக்கித்தாரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டோம். இந்த பயமுறுத்தும் அனுபவத்திலிருந்து மீண்டு வருவதற்கு எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் தமீம் இக்பால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்