நரேந்திர மோதி பிரிக்ஸ் உரை: சீனாவின் ஷி ஜின்பிங், ரஷ்யாவின் விளாடிமிர் புதின் பங்கேற்பு

புதன், 18 நவம்பர் 2020 (00:04 IST)
தற்போது உலகமே எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தீவிரவாதம்தான் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
 
இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான 'பிரிக்ஸ்' (BRICS) கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த உச்சி மாநாடு தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொள்ளும் வகையில் இல்லாமல், இணையம் வாயிலாக மெய்நிகர் மாநாடாக நடத்தப்பட்டது.
 
பிரிக்ஸ் அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் ரஷ்யாவால் இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
 
நரேந்திர மோதி என்ன பேசினார்?
தீவிரவாத பிரச்சனையை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து கையாள வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்ட மோதி, தீவிரவாத செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் மற்றும் தூண்டிவிடும் நாடுகள் குற்றம் செய்பவர்களாக அடையாளம் காணப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
RCEP: இந்தியா இல்லை; மீண்டும் சீன ஆதிக்கம் - எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
 
அருணாச்சலப் பிரதேசம் அருகே சீன ரயில் திட்டம் இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமா?
 
இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'தற்சார்பு இந்தியா திட்டம்' மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை என்று தனது உரையின் போது குறிப்பிட்ட நரேந்திர மோதி, இந்த திட்டம் மூலம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திற்கு பின்பு தற்சார்புள்ள மற்றும் மீண்டு வரும் திறனுடைய மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவாகும் என்றும் தெரிவித்தார்.
 
கொரோனா வைரஸ் நெருக்கடியின்போது இந்தியா 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்ததாக தனது உரையில் நரேந்திர மோதி கூறினார்.
 
"எங்களது உற்பத்தி மற்றும் விநியோக திறன்களும் இதைப் போலவே மனித குலத்துக்கு சேவையாற்றும்," என்றும் அவர் உறுதியளித்தார்.
 
தனது உரையின்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பல முறை குறிப்பிட்ட மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங் பற்றி எதுவும் பேசவில்லை. ஜின்பிங்கும் மோதி பேசியதை அதிகம் கண்டுகொள்ளாதவராகவே இருந்தார்.
 
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்று இந்தியா நம்புவதாகவும், அதில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க பிரிக்ஸ் நாடுகள் உதவ வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் கூறினார்.
 
 
வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.
 
சர்வதேச அமைப்புகள் காலத்துக்கு ஏற்ப மாறாததால் அவற்றின் நம்பகத் தன்மை மீது கேள்வி எழுகிறது என்றும் மோதி கூறினார்.
 
அடுத்த ஆண்டு இந்தியா தலைமை
பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டு 2021ஆம் ஆண்டு ஆண்டுடன் 15 ஆண்டுகள் நிறைவாக உள்ளது.
 
அடுத்த ஆண்டுக்கான உச்சி மாநாடு இந்தியாவால் தலைமையேற்று நடத்தப்பட உள்ளதைக் குறிப்பிட்டு பேசிய நரேந்திர மோதி பிரிக்ஸ் அமைப்பால் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமலாக்கப்பட்டதில் உறுப்பு நாடுகள் எந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை பற்றி அந்த மாநாட்டில் தெரிவிக்கலாம் என்று யோசனையை முன் வைத்தார்.
 
இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பதற்றம் உண்டான பின்பு காணொலிக் காட்சி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் ஒன்றாகக் கலந்து கொள்ளும் இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.
 
கடந்த வாரம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மெய்நிகர் சந்திப்பின் போதும் மோதி மற்றும் ஷி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்த வார இறுதியில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதுவும் மெய்நிகர் சந்திப்பாகவே நடைபெறும். இந்த கூட்டத்திலும் நரேந்திர மோதி மற்றும் சி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
 
பிரிக்ஸ் நாடுகள்
 
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதியை கொண்டுள்ளன. இந்த நாடுகளில் மட்டும் சுமார் 360 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.
 
இந்த ஐந்து நாடுகளின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 16.6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்பதால் இந்த அமைப்பு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்