கர்ணன் - சினிமா விமர்சனம்

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:50 IST)
நடிகர்கள்: தனுஷ், லால், யோகிபாபு, நட்ராஜ், லட்சுமி சந்திரமவுலி, ராஜிஷா விஜயன், சண்முகராஜா.
 
இசை: சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்; இயக்கம்: மாரி செல்வராஜ்.
 
'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம் இது. 'அசுரன்' படத்திற்குப் பிறகு, தனுஷ் நடித்து சில படங்கள் வெளியாகிவிட்டாலும் 'அசுரன்' படமே மனதில் தங்கியிருக்கும் நிலையில், மாரி செல்வராஜும் தனுஷும் இணையும் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா கர்ணன்?
 
1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்'.
 
விளம்பரம்
 
தூத்துக்குடி மாவட்டத்தில் பொடியன்குளம் என்ற குக்கிராமம். இந்தக் கிராமத்திற்கென பேருந்து நிறுத்தமே இல்லாத நிலையில், ஆதிக்க ஜாதியினர் வசிக்கும் பக்கத்து கிராமத்தில் சென்றுதான் பேருந்தைப் பிடிக்க வேண்டியிருக்கிறது. இதில் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதன் உச்சகட்டமாக, கர்ப்பிணி பெண்ணை ஏற்றுவதற்காகக்கூட நிற்காமல் செல்லும் பேருந்து ஒன்று அடித்து நொறுக்கப்படுகிறது. இதையடுத்து காவல்துறை அந்த கிராமத்தை துவம்சம் செய்ய முயல்கிறது. இதை அந்த கிராமமும் அந்த கிராமத்தின் துடிப்புமிக்க இளைஞனான கர்ணனும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே மீதிக் கதை.
 
சற்றே தவறினாலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய ஒரு கதைக் களத்தை மிகுந்த நுண்ணுணர்வோடும் கவனத்தோடும் கையாண்டிருக்கிறார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தில் ஜாதி ரீதியாக ஒடுக்கப்படும் நாயகன், அத்தனை ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் அதிலிருந்து விலகிச் செல்வதாகவும் பணிந்து செல்வதாகவுமே காட்டப்பட்ட நிலையில், கர்ணன் இந்த ஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தியிருக்கிறான்.
 
ஜாதி என்பது எப்படி பூடகமாகவும் வெளிப்படையாகவும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது, மற்றவர்களை ஒடுக்குகிறது என்பதை பிரச்சார நெடியே இல்லாமல் படம் நெடுக காட்சிகளால் சொல்லியிருப்பது அட்டகாசம்.
 
கர்ணன், கர்ணனின் கூடவே வரும் எமன், கர்ணனின் காதலியான திரௌபதி, கர்ணனின் நடவடிக்கைகளோடு முரண்படும் அபிமன்யு என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு நுணுக்கமான ரோல் படத்தில் இருக்கிறது. இவற்றில் ஏதாவது ஒரு பாத்திரம் இல்லாவிட்டால் படம் முழுமை பெற்றிருக்காது என்று தோன்றவைக்கும் வகையில் இந்தப் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 
கர்ணனாக வரும் தனுஷும் எமனாக வரும் லாலும் அதகளம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக லாலின் பாத்திரமும் நடிப்பும் அவரை வேறு ஒரு தளத்தில் நிறுத்திக்காட்டுகின்றன. நாயகியாக ராஜிஷாவுக்கு பெரிய பாத்திரம் இல்லையென்றாலும் தமிழுக்கு அவரை நல்லமுறையில் அறிமுகம் செய்கிறது படம். இவர்கள் தவிர படத்தில் தொடர்ந்து வரும் லக்ஷ்மி சந்திரமவுலி, சண்முகராஜா, யோகிபாபு, ஜி.எம். குமார், குதிரை சிறுவன் ஆகியோர் பொடியன்குளத்தின் மக்களாகவே காட்சியளிக்கிறார்கள்.
 
படத்தில் திரைக்கதைக்கு இணையான பங்கை சந்தோஷ் நாராயணனின் இசையும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் வகிக்கின்றன.
 
படத்தில் பல குறியீட்டுக் காட்சிகள் வருகின்றன. குறிப்பாக, இறந்துபோன குழந்தை மீண்டும் வரும் காட்சிகளும் கால்கள் கட்டப்பட்ட கழுதை வரும் காட்சிகளும் படம் நெடுக வருகின்றன. இதில் கால்கள் கட்டப்பட்ட கழுதையும் அதை நாயகன் அறுப்பது போன்ற காட்சிகளும் மிகவும் பழைய குறியீட்டு பாணியாக இருக்கின்றன. ஆனால், இறந்த குழந்தை, ஒரு நாட்டார் தெய்வமாக மாறி கதையை நகர்த்திச் செல்வது அபாரமாக இருக்கிறது. அதிலும் இறந்த குழந்தை தனது தந்தையின் கனவில் தோன்றுவதும் அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் அபாரமானவை.
 
சிறப்பான இந்தப் படத்தில் கதைக்குத் தேவையில்லாத சில காட்சிகளும் வந்துபோகின்றன. அவை, படம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. மற்றபடி, மீண்டும் ஒரு சிறந்த படத்தோடு தனது வாளை உயர்த்தி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்