கம்பாலா வீரர் ஸ்ரீநிவாச கவுடா: மத்திய அரசின் வாய்ப்பை மறுத்தது ஏன்? - இதுதான் காரணம்

திங்கள், 17 பிப்ரவரி 2020 (13:50 IST)
இந்திய விளையாட்டு ஆணையத்தின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் கம்பாலா விளையாட்டு வீரர் ஸ்ரீநிவாச கவுடா.
 
யார் இந்த ஸ்ரீநிவாச கவுடா?
 
எருது பந்தயத்தில் அதிவேகமாக ஓடி பலரது கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஸ்ரீநிவாச கவுடா.
 
ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் உடன் ஒப்பிட்டு புகழப்பட்டு வருகிறார்.
 
கர்நாடகாவில் மிகவும் பிரபலமான 'கம்பாலா' என்று அழைக்கப்படும் எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.42 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
"எனது பள்ளிக் காலத்திலிருந்தே கம்பாலா பந்தயங்களைப் பார்த்து வந்துள்ளேன். அதனால் எனக்கும் இதில் பங்கேற்க ஆர்வம் வந்தது," என்று பிபிசியிடம் கூறினார் ஸ்ரீநிவாச கௌடா.
தானும் தனது 'அணியின் சக உறுப்பினர்களான', இரு எருமை மாடுகளும் சிறப்பாக செயல்பட்டது குறித்து மகிழ்ச்சியாக உள்ளார் அவர்.
 
தக்ஷிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த மூடுப்பித்ரி எனும் இடத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாச கௌடா.
 
எருமை பந்தயத்தில் ஓடி வேகத்தில் உசைன் போல்டை விஞ்சினாரா இவர்?
அமைச்சர் பரிந்துரை
ஸ்ரீநிவாச கவுடா பிரபலமானதை அடுத்து, அவருக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூலம் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும் என ட்விட்டரில் தெரிவித்து இருந்தார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.
 
இப்படியான சுழலில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் அழைப்பை தற்சமயம் ஏற்க மறுத்துவிட்டார் ஸ்ரீநிவாச கவுடா.
 
இது குறித்து பிபிசியிடம் பேசிய ஸ்ரீநிவாச கவுடா, "என்னால் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தகுதி சுற்றில் கலந்துகொள்ள முடியாது. எனக்கு கால்களில் அடிப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் என் கவனம் முழுவதும் கம்பாலாவில் மட்டுமே உள்ளது," என்றார்.
 
கம்பாலா பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் குணபால கம்பாடாம் "மத்திய அமைச்சர் வழங்கி உள்ள இந்த வாய்ப்பை வரவேற்கிறோம். நாங்கள் அதனை நிராகரிக்கவில்லை. கம்பாலாவிற்கான பெரிய கெளரவமாக இதனை கருதுகிறோம். ஆனால், இந்த சமயத்தில் ஸ்ரீநிவாசால் பயிற்சியில் கலந்துகொள்ள முடியாது," என்றார்.
 
அடுத்த மூன்று சனிக்கிழமைகளுக்கு கம்பாலா போட்டி உள்ளது. ஸ்ரீநிவாஸ் முன்பே இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதிலிருந்து அவரால் பின் வாங்க முடியாது. மூன்று வாரங்களுக்கு பின் விளையாட்டு ஆணையத்தின் தகுதி சுற்றில் கலந்து கொள்வார்," என்றார்.
 
பிற செய்திகள்:
 
ஹஃபீஸ் சயீது பாகிஸ்தான் சிறையில்தான் கடைசி வரை இருப்பாரா?
மேயர் வேட்பாளர் பாலியல் காணொளி வெளியீடு: தோழி கைது, தொடரும் சர்ச்சை
விழுப்புரம் அருகே கும்பல் தாக்கி தலித் இளைஞர் படுகொலை - நடந்தது என்ன?
ஷவேந்திர சில்வா மீது அமெரிக்கா தடை: "இலங்கை ஜனாதிபதி உரிமையை கேள்வி கேட்கிறது"

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்