என்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்): சினிமா விமர்சனம்

வெள்ளி, 31 மே 2019 (13:35 IST)
என்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்): சினிமா விமர்சனம்
 
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
 
 
திரைப்படம் என்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்)
 
நடிகர்கள் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், இளவரசு, பொன் வண்ணன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், பாலாசிங்
 
இசை யுவன் ஷங்கர் ராஜா
 
இயக்கம் செல்வராகவன்
இரண்டாம் உலகம் படம் வெளிவந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் இது. ஒரு மாஸ் ஹீரோவை வைத்து உருவாக்கியிருக்கும் முதல் படமும்கூட.
 
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த என்.ஜி.கே. எனப்படும் நந்த கோபாலன் குமரன் (சூர்யா) ஊரில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். ஊரில் உள்ள இளைஞர்களைத் திரட்டி, சமூகப் பணிகளையும் செய்துவருகிறார். ஆனால், அந்த ஊரில் உள்ள பூச்சி மருந்துக் கடைக்காரர்கள் இயற்கை விவசாயம் செய்யக்கூடாது என அவரை மிரட்டி, அவரது வயலுக்கு தீ வைத்துவிடுகிறார்கள். இதனால் உள்ளூர் அரசியல்வாதியை அணுகி, அந்தப் பிரச்சனையை தீர்க்க முயல்கிறார்.
 
பிறகு அந்த அரசியல்வாதிக்கு (இளவரசு) இருக்கும் சக்தியைப் பார்த்து, அந்த அரசியல்வாதியின் எடுபிடியாக அவரும் அரசியலில் இறங்குகிறார். பிறகு என்.ஜி.கேவின் 'வளர்ச்சி'யைத் தாங்க முடியாமல் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் அவரைக் கொல்ல முயல்கிறார்கள். அவர் கொல்லப்பட்டாரா, நாம் கொல்லப்பட்டோமா என்பது மீதிக் கதை.
 
சமகால அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் பின்னணியில் ஒரு த்ரில்லரை எடுக்க முயன்றிருக்கிறார் செல்வராகவன். ஆனால், யாருடைய பக்கத்திலிருந்து கதையைச் சொல்லப்போகிறோம், எப்படிச் சொல்லப் போகிறோம் என்பதில் கோட்டைவிட்டிருப்பதால் படத்தில் ஒரே குழப்பம்.
 
ஊரில் இளைஞர்கள் சிலர் இயற்கை விவசாயம் செய்வதால் ரவுடிகள் வந்து மிரட்டுகிறார்கள் என படத்தின் ஆரம்பமே நம்பமுடியாமல் இருக்கிறது. தவிர, படத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏகப்பட்ட அரசியல் குறியீடுகள். லோக்கல் தொண்டனான பாலாசிங் நடந்துசெல்லும்போது பின்னால், எம்.ஜி.ஆர். படமும் முதலமைச்சரின் தலைக்குப் பின்னால் சூரியன் படமும் சில காட்சிகளில் வருகின்றன. பிறகு அமைச்சர் ஒருவரின் பாலியல் சர்ச்சையும் நீண்ட எபிசோடாக படத்தில் வருகிறது. இவையெல்லாம் படத்தின் கதைக்கோ திரைக்கதைக்கோ எவ்விதத்திலும் உதவவில்லை.
 
இதற்கு நடுவில் ஐ.டி. நிறுவனத்தைப் போல ஒரு இடத்தைக் காண்பித்து அதைக் கட்சியின் தலைமையகம் என அறிமுகப்படுத்துகிறார்கள். அங்கே வானதி (ரகுல்) என்ற கேம்ப்ரிட்ஜில் படித்த இளம் பெண், கட்சித் தலைவரிலிருந்து அனைவரையும் மிரட்டி வேலை வாங்கிக்கொண்டிருக்கிறார். ஒரு பி.ஆர் நிறுவனத்தை நடத்தும் அவர், அந்தக் கட்சியின் வியூக வகுப்பாளராம். மாதம் ஒன்றரைக்கோடி சம்பளம் வாங்கும் இவ்வளவு டெரரான பெண், சூர்யாவைப் பார்த்தவுடன் விரும்ப ஆரம்பித்துவிடுகிறார்.
 
 
பிரதான கதைக்கு தேவையே இல்லாமல் துண்டுதுண்டாக பல காட்சிகள். என்ஜிகே வானதியைச் ஹோட்டலில் சந்தித்த பிறகு, வானதி என்ஜிகேவிடம், "நீ கேட்டதை செய்ய முடியுமான்னு தெரியலை" என்கிறார். அப்படி என்ன கேட்டார் என்.ஜி.கே? பிறகு ஒரு நாடக அரங்கில் பாலாசிங்கும் என்ஜிகேவும் நீண்ட நேரம் உரையாடுகிறார்கள்.
 
படத்தின் துவக்கத்திலிருந்தே நாயகனின் இலக்கு என்ன என்பது தெளிவாக இல்லாததுதான் பிரச்சனை. முதலில் இயற்கை விவசாயம் செய்கிறார். பிறகு அரசியலில் இறங்கி ஏதேதோ செய்கிறார். பிறகு ஆளுங்கட்சிக்காரர்கள் சம்பந்தமே இல்லாமல் என்ஜிகேவைக் கடத்திக்கொண்டு செல்கிறார்கள்.
 
பிறகு, முதலமைச்சர் என்ஜிகேவை கொல்ல முயல்கிறார். பிறகு என்ஜிகேவுக்கு ஒரு பாராட்டுவிழாவுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்படி பெரிய விழா எடுத்து நடத்தும்படி என்ஜிகே என்ன செய்தார் என நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, மனைவியோடு விழாவுக்கு சைக்கிளில் செல்கிறார். வழியில் சிலர் (சுமார் 100 பேர்) அவரைத் தாக்குகிறார்கள்.
 
அதை மீறி அவர் பாராட்டு விழாவுக்கு வந்து, இரண்டு கைகளையும் விரித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் குண்டுவைத்துவிடுகிறார்கள். பிறகு, எதிர்க்கட்சியின் தலைவராகி, தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பதோடு படம் முடிகிறது. இரண்டாவது பாகத்திற்கு அடிபோடுகிறார்கள் போலிருக்கிறது.
 
படம் முதலில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், வானதி ஆகியோர் சென்னையில் இருக்கிறார்கள். பிறகு, சென்னையா, ஸ்ரீவில்லிபுத்தூரா எனத் தெரியாதபடி எல்லாம் ஒரே இடத்தில் நடக்க ஆரம்பிக்கின்றன.
 
படத்தின் நாயகன் சூர்யாவுக்கு இது ஒரு சிறப்பான படமெனச் சொல்ல முடியாது. திடீர்திடீரென முகபாவங்களை மாற்றுகிறார். ஆவேசமாகப் பேசுகிறார். ஆனால், திரைக்கதை தெளிவாக இல்லாததால் அவராலும் பெரிதாக ஏதும்செய்ய முடியவில்லை.
 
சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு நாயகிகள். நாயகனுக்கு சாய் பல்லவியுடன் ஏற்கனவே திருமணமாகிவிடுகிறது. இதனால், ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் நாயகனுக்கும் உறவு இருப்பதாக சந்தேகப்பட வேண்டியதுதான் படம் முழுக்க நாயகியின் ஒரே கவலை.
 
இப்படி படம் ஏக களேபரமாக போய்க்கொண்டிருக்கும்போது திடீரென நாயனுக்கும் இரண்டாவது நாயகிக்கும் இடையில் ஒரு பாடல் வருகிறது. சத்தியமாக தாங்க முடியவில்லை.
 
இதில் நடித்திருக்கும் சூர்யா, சாய் பல்லவி, ரகுல், பொன் வண்ணன், நழல்கள் ரவி என எல்லோருமே திறமையான, நிரூபிக்கப்பட்ட நடிகர்கள். ஆனால், இந்தப் படத்தில் எல்லோருமே செயற்கையாக நடிக்கிறார்கள். நாயகனின் தந்தையாக வரும் நிழல்கள் ரவிக்கு ஒட்டு மொத்த படத்திலும் ஒரே ஒரு வசனம்தான்.
 
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
 
கதை, திரைக்கதை, படமாக்கம் என எல்லாவற்றிலும் ஏமாற்றமளிக்கும் ஒரு படத்தையே தந்திருக்கிறார் செல்வராகவன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்