நீங்கள் வளர்க்கும் பூனை உங்களை நேசிக்கிறதா? என்ன செய்தல் பூனைக்கு பிடிக்கும் ?

புதன், 27 மே 2020 (11:17 IST)
பூனைகள் தங்கள் வாலை ஆட்டுகின்றனவா? அவற்றின் ரோமங்கள் எப்படி இருக்கின்றன? காதுகளை சுருக்கிக்கொள்கின்றனவா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை வைத்தே அவற்றின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.

செல்லப்பிராணிகளில் நாய்களுடன் நம்மால் நெருக்கமாக இருக்க முடியும். ஆனால் ஆயிரக்கணக்காக ஆண்டுகளாக பலர் பூனை வளர்க்கின்றனர்.

''பூனைகள் நாய்களைப் போன்றவை அல்ல, நாய்களிடம் உணர்வுப்பூர்வமான அன்பை உணர முடியும். ஆனால் பூனைகள் உணவுத் தேவைக்காகவே மனிதர்களை நாடுகின்றன,'' என பலர் பூனைகள் மீதான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இது உண்மையா? ஏன் நாய்களைப் போல் பூனைகள் நெருக்கமாக உணரப்படுவதில்லை.
10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளில் பூனைகள் வீடுகளில் வளர்க்கப்பட்டன. வீடுகளில் உள்ள எலிகள் தானியங்களை உண்ணக் கூடாது என்பதற்காகவே எலிகள் வளர்க்கப்பட்டன.


நாய்களும் மனிதர்களும் ஒரு வகையில் ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒரு வகையில் நாய் மற்றும் மனிதர்களின் வளர்ச்சி இணை பரிணாம வளர்ச்சியாக கருதப்படுகிறது.

மேலும் பூனைகளை தங்களை தாங்களே கவனித்து கொள்வதில் திறமை மிக்கவை. அதனாலேயே பூனைகள் மிகவும் பிரபலமாகின்றன.

ஒரு பூனை பிறந்து முதல் ஆறு அல்லது எட்டு வாரங்களில் அதற்கு இயல்பாக நல்ல அனுபவங்கள் ஏற்பட்டால், பூனைகள் மனிதர்களுடன் நன்றாக பழகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஜப்பானில் உள்ள மீனவ கிராமங்களில் வளரும் பூனைகளுக்கு உள்ளூர் மக்கள் உணவு அளிப்பதால் அவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன. மனிதர்களிடம் தங்களை இணைத்துக்கொண்டு நல்ல நட்பு பாராட்டுகின்றன.
மேலும் இஸ்தான்புல் தெருக்களில் வளரும் பூனைகளுக்கு உள்ளூர் மக்கள் உணவளிப்பதால் அவை அந்நகரை விட்டு வெளியேறாமல், அந்த நகரத்தின் அடையாளமாகவே தற்போது மாறியுள்ளன.

நாமும் பூனைகளுடன் நெருக்கமாகப் பழக என்ன செய்ய வேண்டும்?

நாய்களின் உடல் அசைவுகளைப் புரிந்துக்கொண்டு எப்படி அவற்றுடன் நெருக்கமாக பழக முடிகிறதோ, அதே போல பூனைகளுக்கும் அவற்றின் குரல் தவிர வேறு சில உடல் மொழிகளும் உண்டு.

பூனைகள் மெதுவாக அவற்றின் கண்களை மூடித் திறந்தால் நம்மிடம் அவை காட்டும் பாசத்தின் அடையாளமாக அச்செயல் பார்க்கப்படுகிறது. அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே பூனைகள் மெதுவாக கண் அசைக்கும்.

மேலும் பூனைகள் அவற்றின் தலையை ஒரு பக்கமாக திருப்பிக்கொண்டால் அவை நம்மை வெறுத்து திரும்புகின்றன என்று பொருள் அல்ல. அவை தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்தி கொள்கின்றன என்று அர்த்தம்.

ஓரிகான் ஸ்டேட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பூனையும் நாயும், அதனதன் காப்பாளர்கள் இன்றி தனித்தனியே ஓர் அறையில் சில மணிநேரம் அடைத்து வைக்கப்பட்டன. சில மணி நேரத்திற்கு பிறகு அவற்றின் காப்பாளர்கள் அந்த அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது தனியே அடைத்து வைக்கப்பட்ட பூனை தன் காப்பாளர் உள்ளே நுழைந்ததும் அவர் அருகில் வந்து தன்னை தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டது.

அதேபோல அறைக்குள் தனிமையில் வைக்கப்பட்ட நாய்களும் தங்கள் காப்பாளரை கண்டவுடன் அருகில் சென்று விளையாடின. எனவே நாய்களுக்கும் பூனைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

எனவே பொதுவாகவே மனிதர்களிடம் பாதுகாப்பாக உணர்ந்து, அன்புடன் பழகும் பூனையை நாய்களுடன் ஒப்பிடுவதால் மனிதர்கள்தான் விலங்குகளிடம் வேறுபாட்டுடன் அணுகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.

பூனைகள் குறித்து குறிப்பாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பூனைகளுக்கு உணவையும் தண்ணீரையும் வெவ்வேறு இடங்களில் வைக்க வேண்டும். இவ்வாறு உணவையும் தண்ணீரையும் தனித்தனியாக உட்கொள்ளவே பூனைகள் விரும்பும்.

குறிப்பாக தனக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் தூக்கம் என அனைத்தும் கிடைத்த பிறகே, பூனைகள் மற்ற பூனைகளுடனும் விலங்குகளுடனும் நட்பு பாராட்ட விரும்புகின்றன.

பூனைகள் சோம்பல் முறித்தால் கவலை கொள்ள வேண்டாம். உங்களை பார்க்கப் பிடித்தால் மட்டுமே வீட்டின் ஏதோ ஒரு படுக்கையில் அமர்ந்தபடி சோம்பல் முறிக்கும். எனவே பூனைகளின் உடல் அசைவுகளை புரிந்துக்கொண்டு அவற்றின் மேல் அன்பு செலுத்தி மகிழுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்