கொரோனா வைரஸ்: சீனாவின் ஓர் உயிரி ஆயுதத் திட்டமா?

புதன், 1 ஏப்ரல் 2020 (10:48 IST)
கொரோனா வைரஸ் சிக்கலை சமாளிப்பதற்காக 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா பொது நடமாட்ட முடக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. இது  முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய முடக்கமாகும்.

இந்நிலையில் உலக அளவில் இந்த கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனா எந்த அளவுக்குக் காரணமாக இருந்தது என்பதைப் பற்றி வல்லுநர்களும் ஊடகங்களும்  விவாதிப்பது இந்தியாவில் நடந்து வருகிறது.
 
இதன் ஊடாக சீனாவுக்கு எதிரான உரையாடல் இந்தியாவில் வளர்ந்து வருகிறது.
 
சீனா இந்த கொரோனா வைரஸ் சிக்கலை சமாளித்த விதம் குறித்துக் குற்றஞ்சாட்டி இந்தியர்கள் பலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு  வருகின்றனர்.
 
சமீப காலம் வரை வலைப்பூக்களிலும் சில குறிப்பிட்ட சமூக ஊடக கணக்குகளிலும் உணர்ச்சியூட்டும் சில தொலைக்காட்சி சேனல்களிலும் விவாதிக்கப்பட்டுவந்த  சதிக் கோட்பாடுகள் தற்போது மைய நீரோட்ட ஊடகங்களிலும் விவாதிக்கப்படுகின்றன.
 
கொரோனா வைரஸ் என்பது உண்மையில் சீனாவின் ஓர் உயிரி ஆயுதத் திட்டமா என அவை விவாதிக்கின்றன.
 
கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் தொடங்கியபோது இந்திய முன்னணி ஊடகங்கள் அது குறித்து செய்தி வெளியிட்டவிதம் பெரும்பாலும் கட்டுப்பாட்டோடும்,  சீன அரசாங்கம் குறித்து நடுநிலைத் தன்மையோடும் இருந்ததாகவே தோன்றியது. சில இந்தி சேனல்கள் மட்டும் விதிவிலக்காக கோவிட் 19 வைரஸ் என்பது  சீனாவால் உருவாக்கப்பட்டது என்ற சரி பார்க்கப்படாத தகவலை விவாதித்துக் கொண்டிருந்தன.
 
ஆனால் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள், சீனாவின் கொரோனோ பாதித்த பகுதிகளிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவது தொடர்பான தகவல்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.
 
இந்தியாவில் 21 நாட்கள் பொது நடமாட்ட முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நம்பகமான ஊடக நிறுவனங்களும்,  வல்லுநர்களும் விவாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. நடந்துவரும் சிக்கலுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.
 
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை விவாதிப்பதற்காகச் சீனாவோடு தொடர்ந்து இந்திய அரசு தொடர்பில் இருக்கும் நிலையில் செல்வாக்கு  மிக்க இந்திய ஊடகங்கள் இந்த வைரஸ் பரவலுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று கோருகின்றன.
 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ உடன் ஒரு தொலைபேசி வழி உரையாடல் மேற்கொண்டதாகவும் அதில்  கொரோனா வைரஸை ஒரு 'சீன வைரஸ்' என்று இந்தியா முத்திரை குத்தாது என்று அவர் ஒப்புக் கொண்டதாகவும் இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங்  மார்ச் 24ம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
 
ஆனால் கொரோனா பரவலை தவறாக கையாண்டது என்கிற குற்றச்சாட்டு முதல், சீனாவே அந்த வைரஸை உருவாக்கிப் பரப்பியது என்கிற குற்றச்சாட்டு வரை  பலவிதமான குற்றச்சாட்டுகளைப் பல இந்திய ஊடகங்கள் சீனா மீது தற்போது சுமத்தி வருகின்றன.
 
சீனாவே இந்த வைரஸை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பியது என்ற குற்றச்சாட்டினை Chinese virus, Chinese virus-19 ஆகிய ஹேஷ்  டேக்குகளை பயன்படுத்தி ட்விட்டரில் இந்தியர்கள் பலர் பரவலாக எழுப்பி வருகின்றனர்.

மார்ச் 25-ஆம் தேதி இந்திய அளவிலான முடக்கம் தொடங்கியதிலிருந்து இது நடக்கிறது.
 
கொரோனா வைரஸ் பரவி வரும் விதம், சீன அதிகாரிகள் வேண்டுமென்றே கவனக் குறைவாகவும், விட்டேற்றியாகவும் இருந்து உலகத்தையே  ஆபத்துக்குள்ளாகியிருப்பதைக் காட்டுவதாக பிரபல பாதுகாப்பு மற்றும் தந்திரோபாயத் துறை விமர்சகர் நிதின் கோகலே ஒரு விமர்சனக் கட்டுரையில்  குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த 'சீன வைரஸ்' உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியதற்காக சீனாவின் தேசி்யத் தலைமையை மனித குலத்துக்கு எதிரான குற்றத்துக்குப்  பொறுப்பாக்கும் பணியை உலக நாடுகள் செய்யவேண்டும் என்று அவர் மேலும் கூறியிருந்தார்.
 
சீனா உயிரி ஆயுதம் ஒன்றைப் பரிசோதித்ததன் விளைவே கொரோனா வைரஸ் என்று நிரூபிப்பது கடினம். ஆனால் கொரோனா வைரஸ் முதல் முதலில் பரவத்  தொடங்கிய வுஹான் நகரில்தான் வைரஸ் ஆய்வுக்கான மிகப்பெரிய ஆய்வகம் இருக்கிறது என்கிற உண்மையையும் புறக்கணிப்பது கடினம் என்றும், அந்த  ஆய்வகத்தை சீனாவின் அரசு ஊடகங்கள் பெருமையாக கூறி வந்துள்ளன என்றும் பிரபல இந்தி நாளேடான தைனிக் ஜாக்ரனில் வெளியான ஒரு கட்டுரை  கூறுகிறது.
 
சீனாவே இந்த வைரசை உருவாக்கியது என்றும் இப்போது அதற்கான மருந்துகளையும், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து  அதன் மூலம் லாபம் சம்பாதிப்பதாகவும், பிரபல ஆங்கில செய்தி சேனலான இந்தியா டுடேவில் தொகுப்பாளராகப் பணியாற்றும் ஷிவ் ஆரூர் குற்றம்சாட்டினார்.
 
சீனா ஒரு நம்ப முடியாத, நயவஞ்சகமான நாடு என்றும் அது தற்போது உலகத்துக்கு ஒரு அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்ட அவர் அது முதலில் சிக்கலை  உருவாக்கிவிட்டு அதை தீர்ப்பதற்கான உலகின் முயற்சிகளிலிருந்து லாபம் சம்பாதிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
 
உலக சுகாதார நிறுவனம் மீது குற்றச்சாட்டு
 
இந்திய அரசோ, ஆளும் பாரதிய ஜனதா கட்சியோ கொரோனா வைரஸ் சிக்கலுக்குச் சீனாவைக் குற்றம்சாட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், பாஜகவின் கொள்கைக் கூட்டாளியான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு, சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் கூட்டு சேர்ந்து இந்த சிக்கல் மோசமடைவதை  அனுமதித்ததாகக் குற்றம்சாட்டியது.
 
பொருளாதார விவகாரங்களில் அவ்வப்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆலோசனை கேட்கும் அமைப்பான இந்த சுதேசி ஜாக்ரன் மஞ்ச், கொரோனா  வைரசின் பெயரை 'சீன வைரஸ்' என்று பெயர் மாற்றவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தை வலியுறுத்துகிறது.
 
"உலக சுகாதார நிறுவனத்தின் வகிபாகமும், நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகியிருப்பதாக ஆங்கில செய்தி இணைய தளமான தி பிரிண்ட் இடம் கூறிய சுதேசி  ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி மகாஜன், கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்பதற்கு  தெளிவான ஆதாரம் கிடைக்கவில்லை என்று ஆரம்பத்தில் கூறிய சீனாவின் கூற்றை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டது. ஆனால் இப்போது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவுகிறது என்பது உறுதியாகிவிட்டது. பிறகு ஏன் உலக சுகாதார நிறுவனம் மன்னிப்பும் கேட்கவில்லை, இந்த வைரஸை 'சீன வைரஸ்'  என்றும் ஏன் அழைக்கவில்லை? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
இந்த வைரஸைப் பரப்புவதில் சீனாவின் பெல்ட் அன்ட் ரோட் இனிசியேட்டிவ் என்ற திட்டத்துக்கு என்ன பங்கு என்பது பற்றி ஒரு உலக அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் இந்தத் திட்டத்ததில் சீனாவின் பங்காளி நாடுகளான ஈரான் மற்றும் இத்தாலியில் ஏராளமான  பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று அவர் கூறுகிறார்.
 
அறக்கேடான முறையில் இந்த வைரஸை சீனா பரப்பியதாகவும் இப்போது மொத்த உலகமுமே ஆபத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கொரோனா பரவல் விஷயத்தில் உலக சுகாதார நிறுவனம் எதிர்வினை ஆற்றிய முறையை இந்தியாவில் உள்ள பல சுயாதீன கருத்துருவாக்கிகள் விமர்சித்துள்ளனர்.
 
இந்தப் பிரச்சினையில் உலக சுகாதார நிறுவனம் மோசமான முறையில் எதிர்வினையாற்றியதாக சமீர் சரண் எனும் பிரபல பாதுகாப்பு விவகார விமர்சகர் ஒரு  கட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
உலக சுகாதார நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புகளில் சீனா தன்னுடைய செல்வாக்கை அதிகரித்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். உலக சுகாதார  நிறுவனத்தின் மிகையான சீன ஆதரவு போக்கு என்பது உலகம் முழுதும் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு ஒரு அவசர எச்சரிக்கை சமிக்ஞை என்றும் சரண்  தெரிவித்துள்ளார்.
 
சீனாவுக்கு தொடர்ந்து நன்னடத்தை சான்றிதழ்களை வழங்கி வந்த உலக சுகாதார நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் தனிமைப் படுத்தல் நடவடிக்கைகளைப் பற்றி குறை கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகப் பிரபல பத்திரிகையாளர் சேகர் குப்தா ஒரு யூடியூப் சேனலில்  தெரிவித்துள்ளார்.
 
சீன பிரச்சார முயற்சிகள் குறித்து விமர்சனம்
வைரஸ் பரவல் உலகை உலுக்கி வரும் இந்த நிலையில் பொய்களை பரப்புவதன் மூலம் இந்த வைரஸ் பிரச்சினை குறித்த பொது உரையாடலைக் கட்டுப்படுத்துவதற்குச் சீனா முயல்வதாக இந்தியாவிலுள்ள பல ஊடக நிறுவனங்களும் விமர்சகர்களும் குற்றம் சாட்டும் நிலை உருவாகியுள்ளது.

ஓபன் என்ற ஆங்கில மொழி பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதிய பிரபல பாதுகாப்பு விவகார விமர்சகர் பிரம்மா சலானி "தனது பிராந்தியத்திலிருந்து பரவிய  ஒரு வைரஸை கட்டுப்படுத்துகிற நடவடிக்கையில் தாம் தற்போது உலகத்துக்கே முன் மாதிரியாக இருப்பதாகப் பிரச்சாரம் செய்து சீனா என்னும் வணிக  சின்னத்துக்குப் புதுமுகம் தர சீனா முனைப்புக் காட்டி வருகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
 
டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் பொய் தகவல்களைப் பரப்புவதன் வாயிலாகச் சர்வதேச பொது உரையாடலின் மீது செல்வாக்கு செலுத்துவது என்ற  உத்தியை சீனா கையாள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
கொரோனா பரவல் குறித்த விமர்சனங்களை எதிர்கொள்ளச் சீனா தனது பிரச்சார இயந்திரங்களைப் பயன்படுத்தி வருவதாக WION என்ற ஆங்கில மொழி செய்தி  சேனல் ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் பிரச்சார இயந்திரம் என்பது பல்லாயிரக்கணக்கான போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி உலக  அளவில் சீனாவுக்கு ஆதரவான உள்ளடக்கங்களைப் பதிவிடுவதாக இருக்கிறது என்றும் அந்த சேனல் குறிப்பிட்டுள்ளது.
 
"இந்தப் பிரசார உத்தியின் மற்றொரு மற்றொரு பகுதி 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு 10 மாத பயிற்சி அளிப்பது அந்த திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் பல உலக நாடுகளிலிருந்து பத்திரிக்கையாளர்கள் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டனர்" என்று அந்த சேனல் தனது செய்தியில்  குறிப்பிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்