கொரோனா புதிய திரிபு: மாநில அரசுகளுக்கு இந்திய உள்துறை புதிய உத்தரவு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் புதிய திரிபு ஏற்படுத்தும் தாக்கத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் வைரஸ் பரவல் மற்றும் பாதிப்புகள்  தொடர்பான தனிமைப்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மேலும் கடுமையாக செயல்படுத்துமாறு அனைத்து  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இந்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொடர்பாக நவம்பர் 25ஆம் தேதி வெளியிட்ட வழிகாட்டுதல்களில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் டிசம்பர் 31ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த கட்டுப்பாடுகளை அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிப்பதாக இந்திய உள்துறை கூறியிருக்கிறது.
 
அதே சமயம், அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள், உரிய வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உள்துறை  தெரிவித்துள்ளது.
 
பிரிட்டனில் இருந்து கடந்த இரு வாரங்களில் இந்தியாவுக்கு வந்த பயணிகளில் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் தமிழகம் வந்த 13 பேரும் அடங்குவர். அவர்களின் ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு புணேயில் உள்ள வைராலஜி ஆய்வகத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் 4 பேருக்கு பரிசோதனை முடிவில் புதிய திரிபுவின் தாக்கம் இல்லை என தெரிய வந்துள்ளதாக உள்துறைக்கு அந்த ஆய்வகம்  அறிக்கை அளித்துள்ளது.
 
மற்றவர்களின் மாதிரிகள் மீதான ஆய்வு நடந்து வருகிறது. இந்த புதிய திரிபு வேகமாக பரவி வருவதால், பிரிட்டனில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அந்த நாட்டில் இருந்து உலகின் மற்ற நாடுகளுக்கு வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் இந்தியாவில், கொரோனா  வைரஸ் பரவலையொட்டி அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை ஜனவரி 31ஆம் தேதி அரசு நீட்டித்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்