சக்ரா - திரை விமர்சனம்

சனி, 20 பிப்ரவரி 2021 (10:28 IST)
நடிகர்கள்: விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸான்ட்ரா, ரோபோ ஷங்கர், ஷ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, கே.ஆர். விஜயா, நீலிமா ராணி; இசை: யுவன் ஷங்கர் ராஜா; இயக்கம்: எம்.எஸ். ஆனந்தன்.
 
2018ல் தான் நடித்து வெளிவந்த இரும்புத் திரை திரைப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றதால் அதே பாணியில் ஒரு கதையை மீண்டும் தேர்வு செய்து நடித்திருக்கிறார் விஷால்.
 
சுதந்திர தினத்தன்று சென்னையில் அடுத்தடுத்து 50 இடங்களில் திருட்டு நடக்கிறது. யாரையும் தாக்காமல், கொலை செய்யாமல் இந்தத் திருட்டு நடக்கிறது. இந்த திருட்டு சம்பவத்தை விசாரிக்கிறார் துணை ஆணையர் காயத்ரி (ஷ்ரத்தா). அவருக்கு துணையாக வருகிறார் ராணுவத்தில் பணியாற்றும் சந்துரு (விஷால்). ஏனென்றால், சந்துருவின் வீட்டிலும் அதே நாளில் திருட்டு நடந்து, வீட்டிலுள்ள அசோக சக்ரா விருதும் காணாமல் போயிருக்கிறது. (அசோக சக்ரா விருது காணாமல் போனதால்தான் படத்திற்குப் பெயர் சக்ரா!).
 
காவல்துறையும் ராணுவ அதிகாரியும் சேர்ந்து இந்த மிகப் பெரிய திருட்டைச் செய்தவர்கள் யார் எனத் தேட ஆரம்பிக்கிறார்கள். இந்தத் தேடல், பெரிய நிறுவனங்களில் இருந்து தரவுகள் வெளியாவது, அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்று விரிந்துகொண்டே போகிறது. அந்தத் திருட்டுக்குப் பின்னணியில் இருப்பது யார் என்பதை எப்படி சந்துரு கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
 
தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்த பிறகு, அதை எப்படிச் செய்கிறார்கள், பின்னணியில் இருப்பது யார் என்று சொல்லியிருந்தாலே படம் விறுவிறுப்பாக அமைந்திருக்கும். ஆனால், data leak, அம்மா சோகம், சித்தி கொடுமை என்று எங்கெங்கோ சென்று ஒரு வழியாக முடிந்திருக்கிறது படம்.
 
போன் செய்தால், வீட்டில் உள்ள ரிப்பேர் பணிகளைச் செய்ய ஆட்களை அனுப்பும் ஒரு நிறுவனத்திலிருந்து தகவல்களைத் திருடி இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அது எப்படி நடந்தது என்பதைக் காட்டவில்லை. 'சர்வரை ஹாக் பண்ணீட்டாங்க சார்' என்று ஒரு வரியில் முடித்துவிட்டார்கள். ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் சர்வரை ஹாக் செய்பவர்கள், எதற்கு வீடு புகுந்து நகை, மூக்குத்தி எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என்பது புதிர்தான்.
 
சென்னையையே உலுக்கும் மிகப் பெரிய தொடர் கொள்ளைச் சம்பவத்தில் காவல்துறை விசாரிக்கும்போது, துறைக்கு சம்பந்தமே இல்லாத ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்தக் கொள்ளை சம்பந்தமாக காவல்துறைக்கு ஆணைகளை இடுகிறார். மாநகர ஆணையரே அதைக் கேட்டுக்கொண்டு செயல்படுகிறார் என்று போகிறது படம்.
 
இவ்வளவு பெரிய கொள்ளையை நடத்துபவர், கொள்ளையடித்துவிட்டு பாதுகாப்பாக வெளியேறுவாரா இல்லை ஹீரோவுடன் சவால்விட்டுக் கொண்டிருப்பாரா? ஒரு கட்டத்தில் பைக் திருடர்களை எல்லாம் காவல் நிலையத்திற்கு அழைத்து வருகிறார்கள். 'பிளம்பிங்' வேலை தெரிந்தவர்கள்தான் இந்தத் திருட்டை செய்திருக்க வேண்டுமென ஊகிக்கும் ஹீரோ, யாருக்கெல்லாம் 'பிளம்பிங்' வேலை தெரியும் என கேட்கிறார். திருடர்கள் தாங்களாக கைகளைத் தூக்கி, மாட்டிக்கொள்கிறார்கள். இப்படி எளிதில் மாட்டிக்கொள்வதற்கு எதற்கு அவ்வளவு ஹேக்கிங், கம்யூட்டர் எல்லாம்?
 
வில்லியின் நண்பர் என ஒருவர் வருகிறார். அவருக்கு ஒரு அம்மா. அவரை வில்லி போன் பேசியே கொன்று விடுகிறார். எதற்காக இந்த நண்பர் பாத்திரம், அவரது அப்பாவி அம்மா ஏன் சாக வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடையேயில்லை. இதுபோல படத்தில் பல சம்பவங்கள் நடக்கின்றன.
 
படத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா என்று பல பெரிய நட்சத்திரங்கள் இருந்தாலும் கதை, திரைக்கதையில் சொதப்பியிருப்பதால் யாருடைய நடிப்பும் பெரிதாகக் கவரவில்லை. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. ஆனால், பாடல்கள் ஏதும் இல்லை.
 
எல்லாம் முடிந்த பிறகு, கிளம்பலாம் என்று பார்த்தால், நைஸாக இரண்டாம் பாகத்திற்கு அடிபோடுகிறார்கள். இதெல்லாம் நியாயமா?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்